TNPSC Current Affairs : May-17-2020
உலக அருங்காட்சியகம் நாள்
தலையங்கம்
  • உலகின் மனிதகுல வரலாற்றையும் மனித இனத் தோற்றத்தின் தொல் பழங்காலம் முதல் வந்த மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் காலப்போக்கில் வளர்ந்த பண்பாடு, நாகரிகம், தொழில்கள் போன்றவற்றினையும் அவ்வக்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வரலாற்று பதிவுப் பெட்டகமாகத் திகழக்கூடிய நிறுவனங்களுள் முக்கிய இடத்தைப் பிடித்து நிற்பது அருங்காட்சியகம் என்றால் அது மிகையல்ல. இன்றைய நவீன காலத்தில் உலகெங்கும் அந்தந்த அரசுகளாலும் தனிநபர் அமைப்புகளாலும் பல்வேறு பொருண்மைகளைக் கொண்ட அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. அருங்காட்சியகங்களைக் காண்பதற்காகவே வேண்டி உலகெங்கும் உள்ள மக்கள் அவரவர் பகுதிகளுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தங்கள் வரலாற்று அறிவை மேம்படுத்திக் கொள்கின்றனர். இது அந்தந்த நாட்டு அரசாங்கத்திற்கு சுற்றுலாத் துறையின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் வழிவகை செய்கிறது.
  • தமிழில் அருமை + காட்சியகம் என்பதே அருங்காட்சியகம் என்றும், அதன் பிற பெயர்களாக பொருட்காட்சியகம், பொருட்காட்சி சாலை, அரும்பொருள் காட்சியகம் என்றெல்லாம் வழங்கப்படுகின்றன. கி.மு. 280ம் ஆண்டு வாக்கில் அலெக்சாண்ட்ரியா என்ற இடத்தில் அமைந்துள்ள தனது அரண்மனையில் மியூசியத்தை நிறுவினான் தாலமி. அனைத்து சிறந்த கல்விமான்களும் அங்கே ஒருங்கிணைந்து பணியாற்றினர். இதன் காரணமாகவே மியூசியம் என்றால் கற்றுக்கொள்ளுதல் என்ற பொருளை விதைக்கின்றது. மனிதகுல வரலாற்றில் அழிந்தவை போக எஞ்சியவற்றைக் காப்பது அரசின் கடமை மட்டுமல்ல, மக்களின் பொறுப்பும்கூட. உலக நாகரிகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் காண வேண்டுமென்றால் உலகிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் காணலாம். ஒரு நாட்டின் ஓர் இனத்தின் ஒரு சமூகத்தின் அடையாளங்களை நமக்குக் காட்டக் கூடிய ஆதாரங்களே அருங்காட்சியகங்கள் ஆகும்.
  • கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்தே அருங்காட்சியக அமைப்பு வடிவம் பெற்றாலும் கி.பி. 19ஆம் 20ஆம் நூற்றாண்டில்தான் ஒரு முழுமையான வடிவம் பெற்று வளர்ச்சி பெறத் தொடங்கின. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் உலகில் தோன்றிய தொழில்புரட்சி, மறுமலர்ச்சி இயக்கம் ஆகியவற்றின் விளைவால் புதிய கருத்துக்களைக் கொண்ட அருங்காட்சியகங்கள் தோன்றலாயின. மன்னர், வணிகர், செல்வந்தர், கலை ஆர்வலர்கள் போன்றோரின் ஆர்வத்தால் பழம்பொருள்கள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கூடங்களாகத் தோற்றம் பெற்றன. இக்காட்சிக்கூடங்கள் பின்னர் கல்விக்குரிய இடமாகவும் மாற்றம் பெற்றது. சேகரிப்பு, ஆய்வு, காட்சிப்படுத்துதல், கற்பித்தல் என்ற நான்கு வகையான செயல்முறைகளைக் கொண்டு அருங்காட்சியகம் இன்று செயல்பட்டு வருகின்றன. மியூசியம் என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லாட்சி இதுவரை தெளிவாகக் கூறப்படவில்லை. இச்சொல்லாட்சியானது தென்னிந்திய நாட்டுப்புற மக்களிடத்தே செத்த காலேஜ் என்றும், உயிர் காலேஜ் என்றும் பொதுவாக அழைக்கப்படுவதைக் காணலாம். மியூசியம் என்ற சொல் முதன்முதலில் கி.பி. 1689ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு ஆங்கிலச் சொல் அகராதியில் இடம்பெற்றது. எட்வர்டு பிலிப்ஸ் பதிப்பித்த ஆறாவது சொல் அகராதியில் மியூசியம் என்பதற்குப் பொருளாக கல்விக்கூடம், நூலகம், கல்லூரி, பொது இடம், கல்வியாளர்களின் கூடம், அஸ்மோல் காட்சியகத்தின் சேகரிப்பு எனப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மியூசியம் என்ற சொல்லுக்கு இணையான சொற்களாக ஸ்டூடியோ, ஸ்டூடியோலோ, ஹார்ட்ரோப், மியூசிஸ் என்ற சொற்களைப் பயன்படுத்தினர். கி.பி. 1670இல் லண்டன் மாநகரில் தொடக்க இல்லம் அல்லது தியேட்டர் என்ற இடத்தில் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. இவையே பிற்காலத்தில் திரைப்படம் காண்பிக்கக்கூடிய இடத்திற்கு பெயர் தியேட்டர் எனப்பட்டது. லண்டன் ராயல் கழகத்தில் சேகரிப்புகளை வைத்துள்ள இடத்திற்கு ரெபாஸிட்டரி என்றும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தை மியூசியம் என்றும் அழைத்தனர். இதுபோன்ற பொருட்களைச் சேகரிக்கும் தன்மைக்கு ஏற்ப 'கசோபைலேசியம், ரெப்பாசிட்டரியம், சிமிலியார்சியம், ரிட்டன் நேச்சுரிலயம், தெசாரசு எனப் பொதுப் பெயரிட்டழைக்கப்பட்டன. அதன்பின்னர் 1904இல் 'முரே' என்பாரும், 1949இல் 'விட்டிலின்' என்பவரும் மியூசியம் என்ற இலத்தீன் சொல்லை ஆங்கிலத்திற்குக் கொண்டு வந்தனர். இச்சொல்லிற்கு 'கல்வியாளர்களின் கூடம்' எனப் பொருள் கொண்டனர். மியூசியம் என்ற சொல் மியூசிசு என்னும் கிரேக்கச் சொல்லின் மூலம் பெறப்பட்ட சொல் என்றும், இதற்கு மியூசிக் சரணாலயம் எனப் பொருள் குறித்தனர். இந்தியாவில் 'ஒண்டர்ஹவுஸ்' என்றும் 'சரசுவதி சாலை' என்றும் தொடக்க காலத்தில் அழைத்தனர். மியூசியம் என்ற சொல்லிற்கு இணையான சொல்லாகத் தமிழில் 'கண்காட்சிக்கூடம்', 'கலைக்கூடம்', 'காட்சிசாலை', 'அரும்பொருட்காட்சியகம்', 'அருங்காட்சியகம்', 'அரும்பொருள் வைப்பகம்', 'அகழ்வைப்பகம்' எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கும் முறையை அறிய முடிகின்றது.
  • உலகெங்கும் நடைபெற்ற பல்வேறு மரபு மன்னர்களின், பிற்கால அரசுகளின் போர்வெற்றியின் விளைவாக அரும்பெரும் கலைப்பொருட்கள், வெற்றி பெற்றவர்களால் அவரவர் நாடுகளுக்குக் கொண்டு சென்று சேகரிக்கப்பெற்றது. மாமன்னன் ராஜராஜனும், ராஜேந்திர சோழனும் தாம் வென்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்த கலைப்பொருள்களை கோயில்களிலே வைத்துக் காட்சிப்படுத்தினர். கி.பி. 1741இல் உலக அருங்காட்சியகம் பற்றிய முதல் பொருள் பட்டியல் பதிவு நூல் வெளிவந்தது. இதனை வெளியிட்ட பெருமை சோவியத் ரஷியாவைச் சாரும். இதனை எழுதியவர் டிஸ்சார் இவ்வான் என்பவராவார். இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் புல்லக், சர் தாமஸ் பிரௌன், ஜேம்ஸ் பெட்டிவர், வில்லியம் சார்லிட்டன் ஆகியோரின் சேகரிப்புகள் (கி.பி. 1605 – 1718) உலகப் புகழ்பெற்றவை. ஜேம்ஸ் பெட்டிவர், வில்லியம் சார்லிட்டன் ஆகிய இருவரது சேகரிப்புகளை ஒன்றிணைத்துச் 'சர் ஹென்ஸ்லோன் அருங்காட்சியகம்' என்ற பெயரில் ஏற்படுத்தினர்.
  • ஆசியாவைப் பொறுத்தவரை அருங்காட்சியகங்கள் அமைத்ததில் பெரும் பங்களிப்பு ஆங்கிலேயர்களையே சாரும். கி.பி. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் மிகுதியான காட்சிக்கூடங்கள் ஆசிய நாடுகளில் ஏற்படுத்தப்பட்டன. கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 400 அருங்காட்சியகங்களைக் கொண்டிருந்த ஜப்பான் நாடு இன்று 1800 அருங்காட்சியகங்களைக் கொண்டுள்ளது. ஆசிய நாடுகளில் அதிக அருங்காட்சியகங்கள் உள்ள நாடு ஜப்பான் ஆகும். இந்தியாவில் கி.பி. 1874ஆம் ஆண்டில் எஃப்எஸ் க்ருஸ் என்பவரால் தொடங்கப்பட்ட மதுரா அருங்காட்சியகமே திறந்தவெளி அருங்காட்சியகத்தில் முதன்மையாகும். அதன்பின் கி.பி. 1899இல் கர்சன் பிரபுவால் அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட்டன. கி.பி. 1904இல் தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்ததன் வாயிலாக பல திறந்தவெளி அருங்காட்சியகங்கள் இந்தியாவில் தோன்றின. இந்திய அருங்காட்சியகத்தின் தொடக்கம் 'பம்பி' என்ற தொன்மையான அழிந்துவிட்ட நகரை முதன்முதலில் கண்டுபிடித்த நாள் முதல் தொடங்குகிறது. இதன் விளைவால் கி.பி. 1784ம் ஆண்டு ஆசிய கழகம் என்ற பெயரில் இந்நிறுவனம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. பின்னர் 1804இல் மும்பையிலும் 1818இல் சென்னையிலும் இலக்கிய கழகம் என்ற பெயரில் அமைப்பு ஏற்பட்டது. 1814இல் ஆசிய கழகத்தில் உள்ள கலை சேகரிப்புகளை ஒன்றிணைத்து ஒரு காட்சிக்கூடம் உருவானது. இதன் முதல் காப்பாட்சியராக டாக்டர் என். வாலீச் என்பவர் இருந்தார். பின்னர் இக்காட்சிக் கூடத்திற்கு கிழக்கிந்தியக் கம்பெனி நிதி நல்கை கிடைத்ததால் புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டு செயல்பட்டது. இக்கட்டிடமே கி.பி. 1875இல் தொடங்கப்பட்ட இந்திய அருங்காட்சியகமாகும். கி.பி. 1843இல் கிழக்கிந்திய கம்பெனியின் நிதியால் சென்னையில் மைய அருங்காட்சியகம் ஒன்று தொடங்கப்பெற்றது. இதன் பொறுப்பாளராக டாக்டர் பால்பர் திகழ்ந்தார். இவர் பெங்களூரு, பெல்லாரி, கோவை, கடலூர், திருச்சி, உதகை, மங்களூர், செகந்தராபாத் போன்ற இடங்களில் அருங்காட்சியகங்கள் தொடங்கத் திட்டமிட்டார். இவற்றில் ஆறு அருங்காட்சியகம் மட்டுமே இவரால் ஏற்படுத்த முடிந்தது. சர் ஜான் மார்ஷல் இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றதும் ஆஜ்மீர், சம்பா, ஜோத்பூர், குவாலியர், டாக்கா போன்ற இடங்களில் கி.பி. 1903இல் புதிய தொல்லியல் அருங்காட்சியகங்கள் தோற்றம் பெற்றன. மும்பை நகரில் அருங்காட்சியகம் தொடங்குவதற்காக சேகரிக்கப்பட்ட பொருள்கள் கி.பி. 1851இல் லண்டனில் நடைபெற்ற கண்காட்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டன. அவை அங்கேயே தங்கி விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுவிட்டன. சென்னை அருங்காட்சியகத்தின் முதல் பொறுப்பாளராகத் திகழ்ந்த எட்வர்டு க்ரீன் பால்பர் என்பவர் இத்துறை வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். சென்னை அருங்காட்சியகத்தில் நூலகம் ஒன்றும் விலங்கியல் பிரிவு ஒன்றும் தொடங்கப்பட்டது. இந்நூலகமே பின்னர் கன்னிமாரா நூலகமாக மாறியது.
  • சென்னை அருங்காட்சியகத்தின் சேகரிப்புகள் உலகப் புகழ்பெற்றவை ஆகும். இந்தியாவின் முதல் தொல் பழங்கால கற்கருவிகள் முதல் முதன்முதலில் ப்ரூஸ் பூட் என்ற ஆய்வாளரால் கண்டறியப்பட்டது. இவையனைத்தும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. அதேபோல புரிக்ஸ் மற்றும் மேன்லே போன்றோரின் கண்டுபிடிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்துக்கு 'அரசு மைய அருங்காட்சியகம்' என்று முதலில் பெயரிடப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் வளர்ச்சிக்கு கேப்டன் மிதிக்செல், டாக்டர் ஜார்ஜ்பைடி, தர்ஸ்டன், பிரிட்சு ஆகியோரது முயற்சியும் சேகரிப்பும் பெரிதும் உதவின. கி.பி. 1896இல் கன்னிமாரா நூலகத்திற்கு தனிக்கட்டிடம் கட்டப்பட்டது. கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலகம் கி.பி. 1876இல் புதிய கட்டடத்தில் தொடங்கியது. கருத்தரங்குக் கூடம் எழுப்பப்பட்டது. இதை தொடங்கி வைத்தவர் பக்கிங்ஹாம் அதிபர், சென்னை ஆளுநர் சண்டோஸ் ஆவர். தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம். மாநில அரசு அருங்காட்சியகங்கள், மாநில தொல்லியல் துறை, மத்திய தொல்லியல் துறை அருங்காட்சியகங்கள், கல்விக்கூடங்களின் அருங்காட்சியகங்கள், தனியார் அருங்காட்சியகங்கள் எனப் பல்வேறு துறை சார்ந்த அருங்காட்சியகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றின் உட்பிரிவுகளாக தொல்பொருள் அருங்காட்சியகம், வரலாற்று அருங்காட்சியகம், கள அருங்காட்சியகம், கோயில் அருங்காட்சியகம், கல்லூரி அருங்காட்சியகம், பல்கலைக்கழக அருங்காட்சியகம், பள்ளி அருங்காட்சியகம், தொழில்நுட்ப அறிவியல் அருங்காட்சியகம் அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்களின் நினைவு அருங்காட்சியகம், ஓவியம் அல்லது கலை அருங்காட்சியகம், குழந்தைகள் அருங்காட்சியகம், மானிடவியல் அருங்காட்சியகம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், விளையாட்டு அருங்காட்சியகம், இலக்கிய அருங்காட்சியகம், திறந்தவெளி அருங்காட்சியகம் என இன்று தமிழகத்தில் நூற்றுக்கணக்கான அருங்காட்சியகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
  • மக்கள் அனைவரும் அருங்காட்சியகத்திற்குத் தங்கள் குழந்தைகளையும் அழைத்துச் சென்று, அவர்களை பல்துறை அறிவு பெற்றவர்களாக உருவாக்கிட வேண்டும். நாடுதோறும் உள்ள அருங்காட்சியகங்கள் சென்று பார்த்து அவற்றைப் பாதுகாத்துப் போற்றுவது நம் அனைவரின் கடமையாகும். நன்றி தினமணி