TNPSC Current Affairs : May-16-2020
கொரோனா கொண்டுவந்த வேலையில்லா திண்டாட்டம்
தலையங்கம்- இந்தியாவில் கடந்த ஜனவரி 20-ந்தேதி காலூன்றிய கொரோனா, இப்போது நாடு முழுவதும் வெகுவாக பரவிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போவது கவலை அளிக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை அப்படியே முடங்கிப் போய்விட்டது. வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்படாத நிலையிலும், முறைசாரா தொழில்கள் முடங்கிப்போன நிலையிலும், ஏழை-எளிய, நடுத்தர மக்கள் வேலை இழந்து வீதிக்கு வந்துவிட்டனர். அரசு என்னதான் உதவிக்கரம் நீட்டினாலும், அவர்கள் பசியை போக்கவும், இழந்துபோன வாழ்வாதாரத்தை மீட்கவும் இது நிச்சயம் உதவாது. தாங்கள் இழந்துவிட்ட வேலைவாய்ப்பை மீண்டும் பெறும்போதுதான், அவர்கள் வாழ்க்கை வளம் என்ற விதை முளைக்கும். இந்த நிலையில், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பின் சிந்தனை குழு பல ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஆய்வுகள் எல்லாம் அரசாங்கங்கள் உள்பட எல்லோராலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பு இப்போது வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப்பிறகு, இந்தியாவில் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து இருக்கிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தினக்கூலி வாங்கும் தொழிலாளர்களும், சிறு தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் இந்த ஊரடங்கு நேரத்தில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பாதிப்பு ரொம்ப மோசமாக இருக்கும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், இந்த ஊரடங்கு நேரத்தில் நாட்டிலேயே அதிகமாக வேலையில்லா நிலைமை உருவாகி இருக்கிறது. 49.8 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதத்தில் 0.9 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம், இப்போது 49.8 சதவீதமாக உயர்ந்திருப்பது மிகுந்த கவலை அளிக்கும் ஒன்றாகும். இதில் பெரும்பாலானோர் இதுவரையில் ஏதோ கொஞ்சம் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் செலவழித்து வாழ்க்கையை ஓட்டிவிட்டார்கள். இனி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், முறைசாரா தொழில்கள் எல்லாம் முழுவீச்சில் இயங்கினால்தான் இவர்கள் கொஞ்சம் எழுந்து நிற்க முடியும். இந்த நிலையில், தமிழக அரசு சில தொழில்களை, சில வர்த்தக நிறுவனங்களை திறந்து வைக்க அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், இதிலும் பல குழப்பங்கள் உள்ளன. ஏ.சி. போடக்கூடாது என்ற நிபந்தனை ஏராளமான கடைகளை திறந்து வைக்கமுடியாமல் செய்துவிட்டது. இதனால் வர்த்தக இழப்பு ஒருபக்கம் இருந்தாலும், பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
- மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குறிப்பாக சென்னைக்கு அருகில் உள்ள கனரக தொழில்கள் எல்லாம் திறக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த தொழில்களுக்கு உதிரிப்பாகங்களை தயாரித்துக்கொடுக்கும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அம்பத்தூர், திருமழிசை, திருமுடிவாக்கம், திருமுல்லைவாயல், காக்களூர், கிண்டி, பெருங்குடி, வில்லிவாக்கம் தொழிற்பேட்டைகளில் உள்ள 2 மற்றும் 3-ம் நிலை சிறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கொடுக்கவில்லை. இதேபோல மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளின் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளும் இயங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
- இதுபோன்ற நிலைகளை தவிர்த்து, எந்தவித குழப்பங்களுக்கும் இடமளிக்காமல், எல்லா வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான வகையில் விதிகளை தளர்த்தவேண்டும். கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுப்பதில் இன்னும் வேகம் காட்டவேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதோடு, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை தொடங்குவதற்கும் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கொரோனாவும் கட்டுப்படுத்தபடவேண்டும், மக்களின் இழந்த வாழ்க்கையும் துளிர்க்கவேண்டும். நன்றி தினதந்தி
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019