TNPSC Current Affairs : May-12-2020
சர்வதேச செவிலியர் தினம்
தலையங்கம்
  • இந்த ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்துக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. செவிலியர்களின் அன்னையாக அழைக்கப்படுபவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’. இவர் 1820-ம் ஆண்டு மே 12-ந்தேதி பிறந்தார். அளவுக்கு அதிகமாக செல்வம் கொண்ட எஸ்டேட்களின் அதிபருடைய மகளான பிளாரன்ஸ் நைட்டிங்கேல், தன் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, செவிலியர் படிப்பு படித்து நோயாளிகளுக்கு உதவுவதுதான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்று கருதி செவிலியர் வேலைப்பார்த்தார்.
  • 1853-ம் ஆண்டு ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை பிடிக்க இங்கிலாந்துக்கும், ரஷியாவுக்கும் நடந்த கிரிமியன் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க கிரிமியா போர் முனைக்கு சென்றார். காலராவும், டைபாய்டும் பரவியிருந்த நேரத்தில், காயமடைந்த நோயாளிகளுக்கு கையில் ஒரு விளக்குடன் சென்று கருணையுடன் சிகிச்சை அளித்ததால், இவரை ‘கை விளக்கு ஏந்திய காரிகை’ என்று உலகம் போற்றுகிறது, புகழ்கிறது. செவிலியர் பணிக்கு வரும் அனைவருக்குமே பிளாரன்ஸ் நைட்டிங்கேல்தான் ரோல் மாடல். இந்த ஆண்டு அவருக்கு 200-வது பிறந்தநாள். எனவே தான் உலகம் முழுவதும் இந்தநாளை சர்வதேச செவிலியர் மற்றும் தாதியர் பெண்களின் தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த நாளின் முக்கிய கருப்பொருளாக உலக மக்களுக்கு செவிலியர் மேன்மையை உணர்த்தும் வகையில், ‘உலக நலத்தை நோக்கி செவிலியர் சேவை’ என்ற கருத்து தலைப்பிடப்பட்டுள்ளது.
  • தற்போது உலகம் முழுவதிலும் கொரோனா கொடூர ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் நேரத்தில், செவிலியர்களின் பணி மிக உன்னதமான பணியாக இருக்கிறது. எளிதில் பரவக்கூடிய கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களுடனேயே இருந்து சிகிச்சை அளிக்கும் செவிலியர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வாறு சிகிச்சை அளிக்கும் நேரத்திலேயே பல செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் இருக்கும் என்று தெரிந்தாலும், அதையும் பொருட்படுத்தாமல், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் இந்த வெண் தேவதைகள் நிச்சயமாக நம்மால் வணங்கப்பட வேண்டியவர்கள். ஆனால், இவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று, வீடு திரும்பியுள்ள சென்னையை சேர்ந்த உமா சங்கரி என்ற 46 வயது தியாக தீபமான செவிலியர் தன்னை சுற்றியுள்ளவர்கள் புறக்கணிக்கும் நிலையைக்கண்டு அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயமே வேதனைப்படுவதோடு மட்டுமல்லாமல், வெட்கி தலைகுனிகிறது. அவரை வீட்டுவாசல்களில் இருந்து மக்கள் கைதட்டி வரவேற்பதற்கு பதிலாக, கொரோனாவை பரப்புவதற்கு இங்கு வந்தீர்களா? என்று கேட்டதுதான் கவலை அளிக்கிறது.
  • கொரோனா வார்டுகளில் தங்கள் குடும்பத்தையும், பிள்ளைகளையும் மறந்து, கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்பதையும் பொருட்படுத்தாமல், இந்த சமுதாயத்துக்காக உழைக்கும் செவிலியர்கள், தாதியர் பெண்களுக்கு இந்த சர்வதேச செவிலியர் தினத்தன்று ஒட்டுமொத்த தமிழ்நாடே மனதில் நன்றி பெருக்கோடு வணக்கம் செலுத்துகிறது. தமிழக அரசு, இந்த ஒப்பற்ற பணியை செய்யும் செவிலியர்களை தகுந்தவகையில் கவுரவிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய வேண்டுகோளாகும்.