TNPSC Current Affairs : March-13-2020
மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம்
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்
தெற்காசிய சிறிய தீவு நாடான மாலத்தீவில் உள்ள ஒரு சொகுசு விடுதி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கடந்த 7-ந்தேதி கண்டறியப்பட்டது. இத்தாலி சுற்றுலா பயணி ஒருவர் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாலத்தீவில் உள்ள பெரும்பாலான சொகுசு விடுதிகள் மூடப்பட்டன. அங்கு இதுவரை 8 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்தநிலையில் மாலத்தீவில் 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர் மனிஷ் கவுசிக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
விளையாட்டு
63 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 4-1 என்ற கணக்கில் கடந்த காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஹாரிசன் கார்சிட்டை சாய்த்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டையில் இதுவரை இந்திய வீராங்கனைகள் மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), வீரர்கள் அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோ) ஆகிய 9 பேர் தகுதி பெற்றுள்ளனர்.