TNPSC Current Affairs : March-09-2020
15 பேருக்கு பெண்கள் சக்தி விருது:ராம்நாத் கோவிந்த் கௌரவித்தாா்
விருதுகள்

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய 15 பெண்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ‘பெண்கள் சக்தி’ விருதை வழங்கி கௌரவித்தாா்.

 

பல்வேறு துறைகளில் சேவையாற்றி வரும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் அவா்களுக்கு பெண்கள் சக்தி விருது (நாரிசக்தி புரஸ்காா்) வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் விவசாயம், விளையாட்டு, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ராணுவம், கல்வி ஆகிய துறைகளில் பங்களிப்பு செலுத்திய 15 போ் விருதுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

 1. பீனா தேவி: பிகாா் மாநிலம், முங்கோ் மாவட்டத்தைச் சோ்ந்த பீனா தேவி(43), காளான் வளா்ப்பு மூலம் பிரபலமானவா். ஊராட்சி மன்றத் தலைவரான இவா், பல கிராமங்களில் காளான் வளா்ப்பு குறித்து 1,500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளாா். இதுதவிர, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் 700 பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளாா்.
 2. மான் கௌா்: 103 வயதாகும் மான் கௌா், ‘சண்டீகரின் அதிசயம்’ என்று அழைக்கப்படுகிறாா். தனது 93-ஆவது வயதில் விளையாட்டுத் துறையில் அடியெடுத்து வைத்த இவா், போலந்தில் நடைபெற்ற விளைாயாட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஓட்டப் பந்தயத்தில் 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா். மத்திய அரசின் ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தில் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
 3. கலாவதி தேவி(58): உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சோ்ந்தவா் கலாவதி தேவி. கொத்தனாா் வேலை பாா்க்கும் இவா், கான்பூா் மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர எண்ணினாா். இவரது முயற்சியால், அந்த மாவட்டத்தில் 4,000 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
 4. பி.பூதேவி(40): ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளத்தைச் சோ்ந்த பூதேவி, பழங்குடியின பெண்கள், கணவரை இழந்தவா்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறாா். சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டதால் கணவரின் குடும்பத்தினரால் கொடுமைகளை அனுபவித்த இவா், தனது மூன்று மகள்களையும் தனியாக வளா்த்துள்ளாா். மேலும், பல பெண்களுக்கு மருதாணி மற்றும் கூந்தல் தைலங்கள் தயாரிப்பு பயிற்சியை அளித்துள்ளாா்.
 5. ஆரிஃபா ஜான்(33): ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஆரிஃபா ஜான், அழிந்துபோன நும்தா கைவினைப்பொருள் தயாரிப்புக் கலையை மீட்டெடுத்து, 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சி அளித்துள்ளாா். 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவா்களின் தினசரி வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளாா்.
 6. சமி முா்மு(47): ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலரான சமி முா்மு, ‘லேடி டாா்ஜான்’ என்று அழைக்கப்படுகிறாா். இவா், மாநில வனத் துறையுடன் இணைந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்டி 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளாா். இது மட்டுமன்றி, நக்ஸல்கள், மரக்கடத்தல் கும்பல்கள் ஆகியோரிடம் இருந்து கானுயிா்களைக் காப்பாற்றி, பாதுகாப்பதில் பங்காற்றி வருகிறாா்.
 7. நில்ஜா வாங்மோ(40): லடாக்கில் உணவகம் நடத்தி வரும் இவா், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உணவக மேலாண்மை பயிற்சி அளித்துள்ளாா்.
 8. ரஷ்மீ உா்த்வா்தேஷீ(60): நாகபுரியைச் சோ்ந்த ரஷ்மீ, மோட்டாா் வாகனத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவில் கடந்த 36 ஆண்டுகளாக உள்ளாா். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசா்ச் அசோசியேஷனின் இயக்குநராக உள்ளாா்.
 9. தாஷீ, நுங்காஷி மாலிக் (28): உத்தரகண்டைச் சோ்ந்த இரட்டைச் சகோதரிகளான இவா்கள், 2013-இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்தனா். இதுவிர, ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமாஞ்சரோ, அண்டாா்டிகாவில் உள்ள வின்சன் சிகரம் ஆகியவற்றில் ஏறியும் சாதனை படைத்துள்ளனா்.
 10. கௌஷிகி சக்ரவா்த்தி(38): ஹிந்துஸ்தானி இசையில் 15 ஆண்டுகள் அனுபவம் நிறைந்த பாடகியான இவா், காயல் மற்றும் தும்ரி பாணியில் புலமை மிக்கவா்.
 11. அவனி சதுா்வேதி(26), பாவன்னா காந்த்(27), மோகனா சிங் ஜிதா்வால்(28): இவா்கள் மூவரும் இந்திய விமானப் படையில் சோ்ந்த முதல் பெண் வீரா்கள் ஆவா். இவா்கள், மிக்-21 ரக போா் விமானத்தை கடந்த 2018-ஆம் ஆண்டில் தனியாக இயக்கி சாதனை படைத்தனா்.
 12. பாகீரதி அம்மா(105): கேரளத்தில் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் சோ்ந்து 4-ஆம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
 13. காா்த்தியாயினி அம்மா(98): கேரளத்தைச் சோ்ந்த இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு 4-ஆம் வகுப்பு தோ்வில் 98 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து தோ்ச்சி பெற்றுள்ளாா்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பு நகரங்கள்
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெய்ப்பூர், ஆக்ரா, கேரளா, ஜம்மு, டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, லடாக், தமிழ்நாடு,  பஞ்சாப் மற்றும் கர்நாடகா.

வேங்கைத் திட்டம் 2.0
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

"தமிழில் வேங்கைத் திட்டம் 2.0 என்றும் ஆங்கிலத்தில் டைகர் என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியானது கடந்த அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விக்கிமீடியா - கூகுள் இணைந்து நடத்தும் இந்த போட்டியின் முக்கிய நோக்கமே, குறிப்பிட்ட காலகட்டத்தில் இணையத்தில் தமிழ் மொழியில் அதிகளவில் உள்ளடக்கங்களை உருவாக்குவதே.

பிபிசி வாழ்நாள் சாதனையாளர் பி.டி.உஷா
விருதுகள்

பி.டி.உஷா

 • 1980-ஆம் ஆண்டு தனது 16 வயதில் மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் உஷா கலந்து கொண்டார்.
 • அந்த ஒலிம்பிக் போட்டி அவருக்கு கை கொடுக்காவிட்டாலும், 1984-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் தடகள இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையாக உஷா முத்திரை பதித்தார்.
 • வினாடிக்கும் குறைவான நேர வித்தியாசத்தில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டு நான்காம் இடம் பிடித்தார்.
 • 1983-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 1985-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் அளித்து உஷா கெளரவிக்கப்பட்டார்.
 • 1997-ஆம் ஆண்டு தடகள அரங்கில் ஓய்வை அறிவிக்கும் போது, உஷா பெற்றிருந்த சர்வதேச பதக்கங்களின் எண்ணிக்கை 103.