TNPSC Current Affairs : February-04-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்

தலித்திய வர்ணாசிரமம்

துப்புரவுத் தொழிலாளர்களின் அவலம்

  • துப்புரவுத் தொழிலாளர்களின் அவலத்தை தேசியக் களங்கமாகவோ, மனித உரிமை மீறலாகவோ, மனிதாபிமானத்துக்கு இழுக்காகவோ நாம் கருதுவதில்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.
  • பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்து, மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சராக ராம்தாஸ் அதாவலே பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு இந்தப் பிரச்னை குறித்து அரசின் கவனம் திரும்பியிருக்கிறது.
  • முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் அரசிலும் இது குறித்து சில சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால், நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
  • மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 340 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது பணியின்போது உயிரிழந்திருப்பதாக அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
  • உயிரிழந்தவர்களில் 75% உத்தர பிரதேசம், தமிழ்நாடு, தில்லி, மகாராஷ்டிரம், குஜராத், ஹரியாணா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் எந்தவிதப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் கழிவுநீரோடைகளிலும், தொட்டிகளிலும் இறங்கியபோது உயிரிழந்திருக்கிறார்கள்.
  • 1955-இல் குடிமை உரிமை பாதுகாப்புச் சட்டத்தில் தொடங்கி, மனிதக் கழிவுகளை அகற்றுவது, கழிவுநீரோடைகளில் இறங்கி துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றுவது உள்ளிட்ட அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல குழுக்கள் அமைக்கப்பட்டு திட்டங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றன.
  • 1933-இல் இயற்றப்பட்ட சட்டமும், 2013-இல் இயற்றப்பட்ட சட்டமும், இப்போது இயற்றப்பட்டிருக்கும் சட்டத்திருத்தமும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பையும், அவர்களது குடும்பத்திற்கு சில உத்தரவாதங்களையும் வழங்குகின்றன.
  • 2018-இல் சஃபாய் கர்மசாரி (துப்புரவுத் தொழிலாளர்கள்) தேசிய ஆணையம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவிலுள்ள 18 மாநிலங்களில் 39,000 துப்புரவுத் தொழிலாளர்கள் காணப்படுகிறார்கள்.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 26 லட்சம் கழிப்பறைகள் துப்புரவுத் தொழிலாளர்களால் மனிதக் கழிவுகளை அகற்றும் வகையில் அமைந்திருக்கின்றன.
  • 2011-இல் மேற்கொள்ளப்பட்ட சமூக, பொருளாதார, ஜாதி கணக்கெடுப்பின்படி, தேசிய அளவில் 1,82,505 துப்புரவுத் தொழிலாளர்கள் காணப்படுகிறார்கள்.
  • துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஃசபாய் கர்மசாரி ஆந்தோலன்) புள்ளிவிவரப்படி, 7.70 லட்சம் பேர் நாடு தழுவிய அளவில் கழிவுநீர்த் தொட்டிகள், ஓடைகள், சாக்கடைகளில் நேரடியாக இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
  • காந்தியடிகளுக்குப் பிறகு இவர்களுக்காகக் கவலைப்பட யாருமே இல்லை.
  • தலித்தியம் பேசுகிறார்கள். தலித்துகளை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் நடத்துகிறார்கள். தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களாக வலம் வருகிறார்கள்.
  • ஆனால், அவர்கள் யாருக்குமே அடித்தட்டு நிலையிலிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த அக்கறையோ, அவர்களின் உரிமைக்காக குரலெழுப்ப வேண்டும் என்கிற உணர்வோ இருப்பதில்லை.
  • ஏனென்றால், துப்புரவுத் தொழிலாளர்கள் அவர்களின் வாக்குவங்கி அல்ல. அதுமட்டுமல்லாமல், தலித்திய வர்ணாஸ்சிரம இலக்கணப்படி, துப்புரவுத் தொழிலாளர்கள் தீண்டத்தகாதவர்கள்!

நன்றி: தினமணி (04.02.2021)